top of page
Search

ஜீவகாருண்யம்

Updated: Oct 8, 2020

1. பசி என்கிற நெருப்பானது ஏழைகள் தேகத்தினுள் பற்றி எரிகின்றபோது ஆகாரத்தால் அவிக்கின்றது தான் ஜீவகாருணியம்.


2. பசி என்கிற விஷக்காற்றானது ஏழைகள் அறிவாகிய விளக்கை அவிக்கின்ற தருணத்தில் ஆகாரங்கொடுத்து அவியாமல் ஏற்றுகின்றதே ஜீவகாருணியம்.


3. கடவுள் இயற்கை விளக்கத்திற்கு இடமாகிய ஜீவதேகங்கள் என்கிற ஆலயங்கள் பசியினால் பாழாகும் தருணத்தில் ஆகாரங்கொடுத்து அவ்வாலயங்களை விளக்கம் செய்விப்பதே ஜீவகாருணியம்.


4. கடவுள் இன்பத்தைப் பெறுகின்ற நிமித்தம் தேகங்களிலிருந்து குடித்தனம் செய்கின்ற ஜீவரது தத்துவக் குடும்பம் முழுதும் பசியினால் நிலைதடுமாறி அழியும் தருணத்தில் ஆகாரம் கொடுத்து அக்குடும்ப முழுதும் நிலைபெறச் செய்வதே ஜீவகாருணியம்.


5. பசி என்கிற புலியானது ஏழை உயிர்களைப் பாய்ந்து கொல்லத் தொடங்குந் தருணத்தில் அப்புலியைக் கொன்று அவ்வுயிரை இரட்சிப்பதே ஜீவகாருணியம்.


6. பசி என்கிற விஷம் தலைக்கேறிச் ஜீவர் மயங்கும் தருணத்தில் ஆகாரத்தால் அவ்விஷத்தை இறக்கி மயக்கந் தெளியச் செய்வதே ஜீவகாருணியம்.


7. பசி என்கிற கொடுமையாகிய தேள் வயிற்றில் புகுந்து கொட்டுகின்றபோது கடுப்பேறிக் கலங்குகின்ற ஏழைகளுக்கு ஆகாரத்தால் அக்கடுப்பை மாற்றிக் கலக்கத்தைத் தீர்ப்பதே ஜீவகாருணியம்.


8. நேற்று இராப்பகல் முழுவதும் நம்மை அரைப்பங்கு கொன்று தின்ற பசி என்கிற பாவி இன்றும் வருமே, இதற்கென்ன செய்வோம்! என்று ஏக்கம் கொள்கின்ற ஏழைச் ஜீவர்களது ஏக்கத்தை நீக்குவதுதான் ஜீவகாருணியம்.


9. வெயிலேறிப் போகின்றதே! இனிப் பசி என்கிற வேதனை வந்து சம்பவிக்குமே! இந்த விதிவசத்திற்கு என்ன செய்வது! என்று தேனில் விழுந்த ஈயைப்போல, திகைக்கின்ற ஏழைச் ஜீவர்களுடைய திகைப்பை நீக்குவதுதான் ஜீவகாருணியம்.


10. இருட்டிப் போகின்றதே இனி ஆகாரங் குறித்து எங்கேபோவோம்! யாரைக் கேட்போம்! என்ன செய்வோம்! என்ற விசாரத்தில் அழுந்திய ஏழைச் ஜீவர்களது விசாரத்தை மாற்றுவதே ஜீவகாருணியம்.


11. நடந்து நடந்து காலும் சோர்ந்தது, கேட்டுக்கேட்டு வாயும்சோர்ந்தது, நினைத்து நினைத்து மனமும் சோர்ந்தது, இனி இப்பாவி வயிற்றுக்கு என்ன செய்வோம்? என்று கண்ணீர் வடிக்கின்ற ஏழைகளுக்கு ஆகாரம் கொடுத்துக் கண்ணீரை மாற்றுவதே ஜீவகாருணியம்.


12. பகற்போதும் போய்விட்டது, பசியும் வருத்துகின்றது, வேறு இடங்களிற்போக வெட்கம் தடுக்கின்றது, வாய் திறந்து கேட்க மானம் வலிக்கின்றது, வயிறு எரிகின்றது, உயிரை விடுவதற்கும் உபாயம் தெரியவில்லை; இவ்வுடம்பை ஏன் எடுத்தோம்! என்று மனமும் முகமும் சோர்ந்து, சொல்வதற்கு நாவெழாமல் உற்பாத சொப்பனங்கண்ட ஊமையைப்போல் மனம் மறுகுகின்ற மானிகளாகிய ஜீவர்களுக்கு ஆகாரங் கொடுத்து மானத்தைக் காப்பதுவே ஜீவகாருணியம்.


13. நாம் முன் பிறப்பில், பசித்தவர்கள் பசிக் குறிப்பறிந்து பசியை நீக்கியிருந்தால், இப்பிறப்பில் நமது பசிக்குறிப்பறிந்து பசியை நீக்குவதற்குப் பிறிதொருவர் நேர்வார்; அப்போது அப்படி நாம் செய்ததில்லை, இப்போது நமக்கு இப்படிச் செய்வாருமில்லை என்று விவகரித்துக் கொண்டு தூக்கம் பிடியாமல் துக்கப்படுகின்ற ஏழைச் ஜீவர்களுக்கு ஆகாரங்கொடுத்துத் துக்கத்தை நீக்கித் தூக்கம் பிடிக்க வைப்பதே ஜீவகாருணியம்.


14. தேகம் முழுதும் நரம்புகள் தோன்றப் பசியினால் இளைத்து உயிரொடுங்கி மூர்ச்சை மூடிய காலத்தும் அயலாரைக் கேட்பது துணியாமல் கடவுளை நினைத்து நினைத்து நெருப்பில் படுத்து, நித்திரை செய்யத் தொடங்குவாரைப் போல, அடிவயிற்றில் கொடிய பசி நெருப்பை வைத்துப் படுக்கத் தொடங்குகின்ற விவேகிகளுக்கு ஆகாரங் கொடுத்து அந்தப் பசி நெருப்பை ஆற்றுவதே ஜீவகாருணியம்.


15. நேற்றுப் பட்டினி கிடந்ததுபோல் இன்றும் பட்டினி கிடப்பது எப்படி? நாம் பாலியவசத்தால் இன்றும் பட்டினி கிடக்கத் துணிவோமாயினும், பட்டினி சகியாத நமது ஏழை மனைவி வயிற்றுக்கு யாது செய்வோம்? இவள் பசியைக் குறிப்பதும் பெரிதல்ல, வார்த்திப திசையால் மிகவும் சோர்ந்த நமது தாய் தந்தைகள் இன்றும் பட்டினி கிடந்தால் இறந்து விடுவார்களே! இதற்கென்ன செய்வோம்? பசியினால் அழுதழுது களைத்த நமது புத்திரர்களது சோர்ந்த முகத்தை எப்படிப் பார்ப்போம்? என்று எண்ணி எண்ணிக் கொல்லன் உலையில் ஊத மூண்ட நெருப்பைப் போல் பசி நெருப்பும், பய நெருப்பும், விசார நெருப்பும் உள்ளே மூண்டபடியிருக்கக் கன்னப்புடையில் கைகளை வைத்துக் கொண்டு கண்களில் நீர் கலங்க வருந்துகின்ற ஏழைகளுக்கு ஆகாரம் கொடுத்து வருத்தத்தை மாற்றுவதே ஜீவகாருணியம்.


16. கண், கை, கால் முதலிய உறுப்புகளில் குறைவில்லாதவர்களாகி ஆகாரம் சம்பாதிக்கத்தக்க சக்தியுள்ளவர்களும் பசியால் வருந்தி இதோ படுத்திருக்கின்றார்கள், குருடும், செவிடும், ஊமையும், முடமுமாக இருக்கின்ற நமக்கு ஆகாரம் எந்த வழியால் கிடைக்கும்? பசி எப்படி நீங்கும்? என்று தனித்தனி நினைத்து நினைத்துத் துக்கப்படுகின்ற ஏழைகளுக்கு ஆகாரம் கொடுத்துத் துக்கத்தை நீக்குவதே ஜீவகாருணியம்.

17. பசியினால் வருந்துகின்றவர்கள் எந்தத் தேசத்தாராயினும், எந்தச் சமயத்தாராயினும் எந்தச் சாதியாராயினும் எந்தச் செய்கையாராயினும் அவர்கள் தேசவொழுக்கம், சமயவொழுக்கம், சாதியொழுக்கம், செய்கையொழுக்கம் முதலானவைகளைப் பேதித்து விசாரியாமல், எல்லாச் ஜீவர்களிடத்தும் கடவுள் விளக்கம் பொதுவாய் விளங்குவதை அறிந்து, பொதுவாகப் பார்த்து அவரவர் ஒழுக்கத்திற்குத் தக்கபடி அவர்கள் பசியை நிவர்த்தி செய்விப்பதே ஜீவகாருணியம்.

- சிதம்பர இராமலிங்கம்



 
 
 

Recent Posts

See All
நித்திய கரும விதி- 3

சிறப்பு விதி 1. நித்தியம் சூரியோதயமாக 5 நாழிகைக்கு19 முன்னே நித்திரை நீங்கி எழுந்திருத்தல். 2. எழுந்தவுடன் விபூதி தரித்துச் சற்றுநேரம்...

 
 
 
நித்திய கரும விதி - 2

பொது விதி 1. ஆறு மாதம் அல்லது மூன்று மாதத்திற் கொருதரம், வெள்ளைக் காக்கட்டான் முதலானவைகளால் விரேசனம்16 வாங்கிக் கொள்ளுதல். 2. நாலு...

 
 
 
பேருபதேசம்

திருவருட்பிரகாச வள்ளற் பெருமான் இயற்றிய திருவருட்பா உரைநடைப்பகுதியில் குறிப்பித்த பேருபதேசம் ; திருச்சிற்றம்பலம் அருட்பெருஞ்ஜோதி...

 
 
 

Comments


Post: Blog2_Post
bottom of page